தமிழ்நாடு செய்திகள்

கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய பட்டியலை ஏன் இதுவரை வெளியிடவில்லை?- அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Published On 2025-06-26 13:17 IST   |   Update On 2025-06-26 13:17:00 IST
  • ஒரு மாநிலத்தின் வளர்ச்சி முழுக்க முழுக்க கட்டுமான துறையில் தான் உள்ளது.
  • ஒப்பந்ததாரர்களின் பொருள்களின் விலை நிர்ணயம் குறித்த பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும்.

மதுரை:

புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்புராம், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் அரசு நெடுஞ்சாலை சாலை பணிகள், கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கும் பணியை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகின்றேன். தற்போது தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி முழுக்க முழுக்க கட்டுமான துறையில் தான் உள்ளது.

இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்ச தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் இது பாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு கட்டுமான பொருட்கள் விலையை குறைத்து நிலையான விலையில் வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கான 2025-26 ஆம் ஆண்டுக்கான கட்டுமான பொருள்களின் விலை பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெளியிடவில்லை. உரிய காலத்தில் வெளியிட்டால்தான் ஒப்பந்ததாரர்கள் விலை பட்டியல் அடிப்படையில் ஒப்பந்த புள்ளி நிர்ணயம் செய்ய முடியும். தற்போது ஒப்பந்ததாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும் கடந்த 2024-25 ஆம் ஆண்டிற்கான விலை நிர்ணய தொகையின் அடிப்படையிலேயே தற்போது ஏல ஒப்பந்தம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 2024-25 ஆண்டிற்கு நிர்ணயம் செய்யப்பட்ட சிமெண்டு, ஜல்லி, மணல், தற்போது 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல் கட்டிட தொழிலாளர்களின் சம்பள விகிதமும் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு உள்ள சூழலில் அரசு இந்த வருடத்திற்கான விலை நிர்ணய பட்டியல் வெளியிடவில்லை.

இந்த வருடத்திற்கான விலை நிர்ணய பட்டியலை வெளியிடக் கோரி நிதித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட செயலாளருக்கு மனு அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த வருடத்திற்கான விலை நிர்ணய பட்டியலை உடனடியாக வெளியிட உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி ஏப்ரல் மாதம் வெளியிடக்கூடிய விலை நிர்ணய பட்டியலை ஏன் இன்னும் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார். இவ்வாறு இருந்தால் ஒப்பந்ததாரர்கள் எவ்வாறு விலை நிர்ணயம் செய்து ஒப்பந்த புள்ளி கேட்க முடியும்?

மேலும் விலைவாசிகளும் உயர்ந்து உள்ளது என தெரிவித்த நீதிபதி, ஒப்பந்ததாரர்களின் பொருள்களின் விலை நிர்ணயம் குறித்த பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News