தமிழ்நாடு செய்திகள்

ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது- நிர்மலா சீதாராமன்

Published On 2025-09-20 21:44 IST   |   Update On 2025-09-20 21:44:00 IST
  • 28 சதவீதத்தில் இருந்து 18 ஆகவும், 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
  • ஜி.எஸ்.டி. புரட்சியை, பிரதமர் மோடி மக்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா கோவில்பட்டியில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி வளாகத்தில் நடந்தது.

விழாவுக்கு, நூற்றாண்டு விழாக் குழுத் தலைவர் எஸ்.மகேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்.எஸ்.டி.கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் தீப்பெட்டி தொழில் கடந்து வந்த பாதை குறித்து விளக்க உரையாற்றினார். பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம.எல்.ஏ, கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

விழவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. எம்.பி. இல்லையென்றால் என்ன, அதுவும் பாரத நாட்டின் ஒரு பங்குதான், அங்கும் சிறப்பாக நாம் செயல்பட வேண்டும் என நினைத்து பிரதமர் மோடி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு மீது பிரதமருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம் உள்ளது.

இந்த விழாவை பிரதமருக்கான பாராட்டு விழாவாக கருதுகிறேன். அவருடைய ஆதரவு இல்லாமல் நாம் எதையுமே செய்திருக்க முடியாது. தென் மாவட்டங்களில் உள்ள பெரிய திட்டங்களுக்கு பிரதமர்தான் காரணம்.

2047க்குள் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில் நமது நாட்டு வர்த்தகத்திற்கு எந்த விதத்தில் பங்காற்ற முடியும் என்பது குறித்து நீங்களே ஒரு வழிவகுத்து, திட்டத்தை தயாரித்து கொடுத்தால், அதற்கு ஏற்ற விதமாக என்னென்ன மத்திய அரசு மூலமாக கொடுக்க முடியும் என்பதற்கான முயற்சியில் நான் முழுமையாக ஈடுபடுவேன்.

2026இல் உங்களுக்கு எம்.எல்.ஏ.வோ, 2029-இல் எம்.பி.யோ உங்கள் கஷ்டத்தை புரிந்து வேலை செய்யக் கூடிய கடம்பூர் ராஜு மாதிரியானவர்களை தேர்ந்தெடுங்கள்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர், தென் மாவட்டங்களை இணைத்து, எதிர்காலத்தில் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு தேவையான தொலைநோக்கு திட்ட அறிக்கை தயாரித்து கொடுத்தால் , 2047க்கு முன்னர் நல்ல திட்டங்கள் மூலம் இந்த மாவட்டங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோம்.

இந்த முறை ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை, புரட்சி செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு பெரிய மாற்றத்தை எடுத்து வந்திருக்கிறோம். 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது. 10 சதவீதம் குறைத்துள்ளோம்.

28 சதவீதத்தில் இருந்து 18 ஆகவும், 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரக்கூடிய ஆதாயம் என்பது மக்களுக்கான ஜிஎஸ்டி சேமிப்பு என்பதுதான். ஜி.எஸ்.டி. வரிக்குறைப் பினால் கிடைக்கும் சேமிப்பை உங்கள் குடும்ப நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜி.எஸ்.டி. புரட்சியை, பிரதமர் மோடி மக்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு எல்லாரும் வழிவகுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News