தமிழ்நாடு செய்திகள்

தனியார் மினி பஸ்சை சிறைப்பிடித்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்- தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பரபரப்பு

Published On 2025-12-11 14:47 IST   |   Update On 2025-12-11 14:47:00 IST
  • அரசு பஸ் மற்றும் ஒரு தனியார் மினிபஸ்சுக்கு இடையே யார் முன்னே சென்று பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக பிரச்சனை எழுந்தது.
  • பஸ் நிலையத்தில் இரண்டு பஸ்களும் நிறுத்தப்பட்டு இரண்டு பஸ் டிரைவர், கண்டக்டர்களும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. இது தவிர ஏராளமான மினிபஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. எப்போதும் பழைய பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

இந்த நிலையில் இன்று அரசு பஸ் மற்றும் ஒரு தனியார் மினிபஸ்சுக்கு இடையே யார் முன்னே சென்று பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதில் 2 நிமிட நேர பிரச்சனையால் அரசு பஸ்சை மறித்து தனியார் மினி பஸ் டிரைவர் திடீரென பயணிகளை ஏற்றி கொண்டு செல்ல முற்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அரசு பஸ் டிரைவர் , கண்டக்டர் அந்த மினிபஸ்சை நிறுத்தி சிறை பிடித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ் நிலையத்தில் இரண்டு பஸ்களும் நிறுத்தப்பட்டு இரண்டு பஸ் டிரைவர், கண்டக்டர்களும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு பதட்டம் உருவானது,

இது பற்றி தகவல் அறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் சமதானப்படுத்தினர். மேலும் முன்கூட்டியே பயணிகளை ஏற்ற முற்பட்ட தனியார் மினி பஸ்சை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இதுபோல் அடிக்கடி யார் பஸ்சை முன்னே எடுப்பது போன்ற நேர பிரச்சனை ஏற்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News