இந்தியாவில் 62 சதவீத குடும்பங்களை லட்சாதிபதிகளாக மாற்றிய 'தங்கம்'
- இந்திய குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன் வரை தங்கம் இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
- அதன் இப்போதைய மதிப்பு ரூ.190 லட்சம் கோடி இருக்கும்.
சென்னை:
மண்ணில் போட்டதும், பொன்னில் போட்டதும் வீணாகாது என்பார்கள். அதனை மெய்யாக்கும் வகையில் தங்கத்தின் விலை விண்ணை முட்டி சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் தற்போது 890 டன் அளவு தங்கம் கையிருப்பு இருக்கிறது. அதேபோல இந்திய குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன் வரை தங்கம் இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
அதன் இப்போதைய மதிப்பு ரூ.190 லட்சம் கோடி இருக்கும். உலகிலேயே அதிக மக்கள் தங்கம் வைத்திருக்கும் நாடுகள் எது என்றால் அது இந்தியாதான். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ஐசிஇ-360 என்ற சர்வேயில் இந்தியாவில் 87 சதவீத வீடுகளில் தங்கம் இருக்கிறது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த சமயத்தில் ஒரு வீட்டில் 10 கிராமம் 22 காரட் தங்கம் இருந்திருந்தால், அதன் அன்றைய மதிப்பு வெறும் ரூ.28 ஆயிரத்து 560 தான். ஆனால் இன்றைய அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 700 ஆகும்.
இதுகுறித்து தங்க கவுன்சில் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, இந்தியாவில் 2021-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 62 சதவீத குடும்பங்கள் தொடக்கநிலை நடுத்தர குடும்பங்கள். அதாவது ஏழைகளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். எனவே இவர்களது வீடுகளில் குறைந்தது ஒரு பவுன் தங்கம் என்ற அளவிலாவது இருக்கும்.
அந்த அடிப்படையில் இந்த 62 சதவீத குடும்பங்களும் லட்சாதிபதி என்ற நிலையை எட்டி உள்ளனர். அதேபோல் 125 பவுன், அதாவது 1,000 கிராம் தங்கம் வைத்திருந்த லட்சாதிபதி குடும்பங்கள் எல்லாம் இப்போது கோடீஸ்வர குடும்பங்களாக உயர்ந்துள்ளனர். மேலும் ஏழை குடும்பங்களில் காதில் போட்டிருக்கும் கம்மல், தோடு என்ற சிறிய தங்க நகை ஆபரணமாக இருந்தாலும், அவர்களுக்கு அதன் மூலம் நல்ல லாபம் கிடைத்து இருக்கிறது. தங்கம் விலை உயர்வு ஏழைகளை லட்சாதிபதிகள் ஆகவும், லட்சாதிபதிகளை கோடீசுவரர்களாகவும் மாற்றி இருக்கிறது என்றனர்.
தங்கம் என்பது வெறும் உலோகம் மட்டுமல்ல. அது இந்திய குடும்பங்களின் உறுதியான நம்பிக்கை, மரபின் அடையாளம், எதிர்கால பாதுகாப்பு ஆகும். எனவே எவ்வளவு விலை தங்கம் வந்தாலும், நமது கலாசார நிகழ்வுகளுடன் அது தொடர்பில் இருப்பதால் விற்பனை குறையாது என்பது மட்டும் உறுதி.