இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - காவல் ஆணையர் அருண் உத்தரவு
- 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
- சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
சென்னை:
சாலை விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரை வழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.
இதற்காகவே போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக வானத்தை இயக்கி விபத்தில் சிக்குவதும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் 25 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ எண்ட்ரியில் வாகனத்தை ஓட்டிச் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல், இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்லுதல் ஆகிய 5 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.