தமிழ்நாடு செய்திகள்

ஓணம் பண்டிகை களை கட்டியது: குமரியில் வாழைத்தார்- பூக்கள் விலை உயர்வு

Published On 2025-09-03 11:29 IST   |   Update On 2025-09-03 11:29:00 IST
  • ஓணம் பண்டிகையையடுத்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் களை கட்டியுள்ளது.
  • குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

நாகர்கோவில்:

மலையாளம் பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஒணம். இந்த பண்டிகை நாளை மறுநாள் (5-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்று காலை அத்தபூ கோலம் வரைந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். கல்லூரிகளில், மாணவிகள் ஓணம் சேலைஅணிந்து வந்திருந்தனர்.

அரசு அலுவலகங்களிலும் பெண் ஊழியர்கள் ஓணம் சேலை அணிந்து இருந்தனர். கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் பூக்களால் அத்தபூ கோலம் வரையப்பட்டது. பல வண்ண கலரில் கோலம் வரைந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை அத்தபூ கோலம் வரைந்தும் ஓண ஊஞ்சலாடியும் கொண்டாடி வருகின்றனர்.

ஓணம் பண்டிகையையடுத்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் களை கட்டியுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் அப்டாமார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வாழை வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்த தார்கள் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனையானது. இதேபோல் மட்டி, கதலி வாழைத்தார்கள் மற்றும் வாழை இலை விலையும் உயர்ந்து காணப்பட்டது.

குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கட்டு வாழை இலைகள் சாதாரணமாக ரூ.500 முதல் 800க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. தோவாளை பூ மார்க்கெட்டிலும் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சி, மல்லிகை பூக்களின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்பட்டது. அவை கிலோ ரூ. 1000-க்கு மேல் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்தது. சம்பங்கி, கேந்தி, அரளி பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

Tags:    

Similar News