குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.
தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தடை
- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- கனமழை காரணமாக குற்றால அருவிகளில் திடீரென காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தொடர் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் நேற்று மதியம் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் திடீரென காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது.
கடந்த 2 தினங்களாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினமும் காட்டாற்று வெள்ளமானது சற்றும் குறையாமல் ஆர்ப்பரித்துக் கொண்டு வரும் நிலையில், 3-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று காலையில் மழைப்பொழிவு சற்று குறைந்து காணப்பட்டதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சீற்றம் சற்று தணிந்து காணப்பட்டது.