மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை அறிவிப்பு
- அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.