உளுந்தூர்பேட்டை போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
- பயன்பாடு இன்றி 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தீ விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த அரசு போக்குவரத்து பணிமனை வளாகத்தில் 65-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பயன்பாடு இன்றி 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை பணிமனையில் இருந்து கடலூருக்கு இயக்கப்பட இருந்த அரசு பஸ் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ வேகமாக பரவி மளமளவென எரிய தொடங்கியது.
இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பணிமனை வளாகத்தில் வேறு எந்த பகுதிக்கும் தீ பரவவில்லை. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து பணிமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.