விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தந்தை-மகள் பலி
- மகள் சூரிய பிரியாவை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் அழைத்துக் கொண்டு செஞ்சி பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்றார்.
- விபத்து குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42). இவரது மகள் சூரிய பிரியா (17). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் கல்லூரிக்கு அனுப்புவதற்காக தனது மகள் சூரிய பிரியாவை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் அழைத்துக் கொண்டு செஞ்சி பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்றார்.
விக்கிரவாண்டி அருகே உள்ள கஞ்சனூர் அடுத்த பூண்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது விழுப்புரத்தில் இருந்து செஞ்சி நோக்கி வந்த லாரி இவர்கள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் லாரியின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்து வெங்கடேசன், மற்றும் அவரது மகள் சூரிய பிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தில் தந்தை-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.