தமிழ்நாடு செய்திகள்

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக உயர்வு

Published On 2025-07-01 12:28 IST   |   Update On 2025-07-01 12:28:00 IST
  • இன்று காலை வழக்கம்போல் 8 மணிக்கு பட்டாசு ஆலை திறக்கப்பட்டது.
  • ஒரு அறையில் எதிர்பாராதவிதமாக உராய்வு காரணமாக வெடி மருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து ஆலைகளிலும் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் ஆடி மாத அம்மன் திருவிழாக்களை முன்னிட்டு ஏராளமான ஆர்டர்களின் பேரில் அதிக அளவிலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமாக கோகுலேஷ் பட்டாசு தொழிற்சாலை சின்னக்காமன்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் சுமார் சின்னகாமன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில் பெரும்பாலும் பேன்சி ரக பட்டாசுகளே அதிகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தரைச்சக்கரம், மத்தாப்பு, புஸ்வானம், பென்சில் வெடி உள்ளிட்டவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இன்று காலை வழக்கம்போல் 8 மணிக்கு பட்டாசு ஆலை திறக்கப்பட்டது.

இதற்காக வெளியூர்களில் இருந்து தொழிலாளர்கள் வேன்களில் அழைத்து வரப்பட்டனர். முதல்கட்டமாக பேன்சிரக பட்டாசு தயாரிப்புக்கு தேவையான மருந்துகளை கலக்கும் பணியை தொழிலாளர்கள் செய்துகொண்டிருந்தனர். சற்று இடைவெளியுடன் கூடிய 5 வெவ்வேறு அறைகளிலும் மருந்து கலக்கும் பணிகள் நடந்தன.

அப்போது ஒரு அறையில் எதிர்பாராதவிதமாக உராய்வு காரணமாக வெடி மருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக வெடிகளுக்கும் தீ பரவியது. இந்த தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியதில் அங்கு பணியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியில் வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர்.

அடுத்த ஒருசில விநாடிகளில் அந்த அறைகளிலும் விபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகளும் இடிந்து தரைமட்டமானது. ஆனாலும் அங்கிருந்த மருந்து பொருட்கள், வெடிகள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருந்ததால் அருகில்கூட யாராலும் செல்ல முடியவில்லை. பின்னர் இதுபற்றி உடனடியாக சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் பெயர், விபரம் வருமாறு:-

1. மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம்.

2. ராமசாமிபுரத்தைச் சேர்ந்த வைரமணி.

3. சூலக்கரையைச் சேர்ந்த லட்சுமி.

4. அனுப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி.

5. ராமமூர்த்தி

6. ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி.

7. ராமஜெயம்

இந்த 7 தொழிலாளர்களும் உடல் சிதறி பலியானார்கள். இறந்தவர்களின் உடல் பாகங்கள் பல மீட்டர் தூரம் வரை சிதறி கருகிய நிலையில் கிடந்தது. மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த பட்டாசு வெடி விபத்து மீட்பு பணியில் சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கட்டிட இடுப்பாடுகளுக்குள் மேலும் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்றும் தேடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து குறித்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து பட்டாசு ஆலை முன்பு அங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்ல முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News