Hall of Fame பட்டியலில் தோனி- வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்
- ‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக ஐசிசி அறிவித்தது.
- இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என தோனி கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுத்தந்த ஒரே கேப்டன் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சுக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 538 சர்வதேச போட்டிகளில் ஆடி 17,266 ரன்கள் எடுத்து இருப்பதுடன், விக்கெட் கீப்பிங்கில் 829 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் 'ஹால் ஆப் பேம்' என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இது கிரிக்கெட்டில் தனது பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என்றும் 43 வயதான தோனி கூறியுள்ளார்.
இந்திய வீரர்களில் ஏற்கனவே பிஷன்சிங் பெடி, கபில்தேவ், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், கும்பிளே, வினோ மன்கட், ஷேவாக், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் ஐசிசின் Hall of Fame பட்டியலில் இணைக்கப்பட்ட தோனிக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்து 2011 உலக கோப்பையை சிக்ஸர் மூலம் வென்றது வரை அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் பதிந்துள்ளன. அமைதியான முறையில் அணியை வழிநடத்தி இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை வழங்கிய எம்.எஸ்.தோனிக்கு பொருத்தமான மரியாதை என எடப்பாடி கூறினார்.