தமிழ்நாடு செய்திகள்

பள்ளி சுவரில் எழுதப்பட்டிருந்ததை படத்தில் காணலாம் - விஷ்ணு (உள்படம்) 

பள்ளி வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழப்பு - அரசு பள்ளி ஆசிரியர் கைது

Published On 2025-10-25 14:47 IST   |   Update On 2025-10-25 14:47:00 IST
  • விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • விஷ்ணு எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்பது மர்மமாக உள்ளது.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு(வயது20). இவர், மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில், என்ஜினீயரிங் கணினி அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

தீபாவளி பண்டிகை விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்த விஷ்ணு, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

நேற்று காலை விஷ்ணு, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த போலீசார், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

போலீசார் பள்ளி வளாகத்தை சுற்றி பார்வையிட்டபோது அங்குள்ள சுவரில் 'என் சாவுக்கு காரணம் பாபு' என எழுதப்பட்டு இருந்தது. இதை விஷ்ணு எழுதி வைத்திருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

பெயரின் முன்பு 'J ' என்ற இன்ஷியலும் எழுதப்பட்டு இருந்தது. இதை வைத்து போலீசார் யார் அந்த பாபு? என விசாரித்தபோது, பாபு அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விஷ்ணு எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்பது மர்மமாக உள்ளது. இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கல்லூரி மாணவர் விஷ்ணு மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் பாபுவை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அரசு பள்ளி ஆசிரியர் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது உயிரிழப்புக்கு ஆசிரியர் தான் காரணம் என உயிரிழந்த கல்லூரி மாணவர் விஷ்ணு சட்டை பையில் கடிதம் இருந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News