தமிழ்நாடு செய்திகள்

தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்- அதிர்ந்து போன குடும்பம்

Published On 2025-09-04 11:00 IST   |   Update On 2025-09-04 11:39:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்துள்ளார்.
  • மின்கட்டண கோளாறு தொகையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி.

இவரது வீட்டிற்கு வழக்கம்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்துள்ளார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற நிலையில் மாதாந்திர மின் கட்டண விபரம் மாரியப்பனின் செல்போனுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து அவர் தனது செல்போனில் மின் கட்டணத்தை செலுத்த முயன்றபோது, அதில் காட்டப்பட்ட தொகையை கண்டு மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அதில் மின் கட்டணமாக ரூ.1 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் பயன்படுத்திய மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா? என அதிர்ச்சியடைந்த மாரியப்பன், உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், அதிகப்படியான மின் கட்டணம் வந்துள்ளது உண்மைதான். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனித தவறு காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்குள் இந்த தவறு சரிசெய்யப்பட்டு, சரியான கட்டணம் பதிவேற்றம் செய்யப்படும்.

மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், அவுட்சோர்சிங் ஊழியர்கள் மூலம் மின் கணக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது. அப்போது ஏற்பட்ட தவறின் காரணமாக இந்த குளறுபடி நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட மின்மீட்டரில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான அளவு கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மின்கட்டண கோளாறு தொகையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News