11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார 'மைக்ரோ' பஸ்கள்- 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்
- முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- பஸ்களை இயக்க உள்ள வழித்தடம், பஸ்கள் இயக்கும் நேரம், சார்ஜிங் இடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை நகர மக்களின் முக்கிய போக்குவரத்தாக மெட்ரோ ரெயில் சேவை மாறி உள்ளது. மெட்ரோ ரெயில் பயணிகள் வீட்டின் அருகில் இருந்தே எளிதில் மெட்ரோ நிலையங்களை சென்றடைய வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 220 புதிய மின்சார ஏ.சி.மைக்ரோ பஸ்களை அறிமுகப்படுத்த போவதாக கடந்தமாதம் தெரிவித்து இருந்தது.
இந்த மைக்ரோ பஸ்கள் மினி பஸ்களை விட அளவில் சிறிதாக இருக்கும். சுமார் 5 முதல் 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏ.சி.மைக்ரோ பஸ்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 5 கி.மீட்டர் சுற்றளவில் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் முக்கிய குடியிருப்பு மற்றும் வணிக மையங்களை மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் செயல்படும்.
இது தொடர்பாக கடந்த 3-ந்தேதி மெட்ரோ ரெயில், மாநகர போக்குவரத்து கழகம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பஸ்களை இயக்க உள்ள வழித்தடம், பஸ்கள் இயக்கும் நேரம், சார்ஜிங் இடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், நங்கநல்லூர், பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை, விம்கோநகர், விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரெயில்நிலைய பகுதியில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே இந்த பகுதிகளில் 22 மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.அவை 20 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படுகின்றன. புதிய மைக்ரோபஸ்கள் அறிமுகமானதும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும். இது மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு மட்டுமே இயக்கப்படும். பயணிகள் தங்களது பகுதியில் இருந்து எளிதாக மெட்ரோ நிலையத்தை அடையலாம். மெட்ரோ ரெயில் இயக்கப்படும் நேரத்திற்கு ஏற்ப இந்த பஸ் சேவை திட்டமிடப்படும், மேலும் பயணிகள் மைக்ரோ பஸ்கள் வரும் நேரத்தை கண்காணித்து "சென்னை ஒன்" செயலியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த மைக்ரோ பஸ் சேவைக்கு பயணிகளிடையே உள்ள வரவேற்பை பொறுத்து மற்ற வழித்தடங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.