3 நாட்கள் தொடர் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வருகை
- பல்வேறு அமைப்பு சார்ந்த பிரதிநிதிகளை சந்தித்து உரையாட உள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருச்சி:
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சி பயணத்தை கடந்த மாதம் 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார்.
பின்னர் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 25-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.
நாளை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணிக்கு திறந்த வேனில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பின்னர் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் மாலை 5.30 மணிக்கும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் லால்குடியில் இரவு 7:00 மணிக்கும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
நாளை மறுநாள் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணச்சநல்லூர் கடை வீதியில் மாலை 4:00 மணிக்கும், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் பேருந்து நிலையம் அருகாமையில் மாலை 5.30 மணிக்கும்,
முசிறி சட்டமன்ற தொகுதியில் முசிறி கைகாட்டி அருகாமையில் இரவு 7 மணிக்கும் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக வருகிற 25-ந் தேதி திங்கட்கிழமை மணப்பாறையில் மாலை 4 மணிக்கும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி புத்தூர் நான்கு ரோட்டில் மாலை 5.30 மணிக்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் முன்பு இரவு 7 மணிக்கும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.
அவரை வரவேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் மற்றும் அலங்கா ரவளைவுகள் கொடி தோரணங்கள் கட்டி வருகின்றனர்.
இந்த மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தின் போது கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சார்ந்த பிரதிநிதிகளை சந்தித்து உரையாட உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் 9 இடங்களிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி, மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
முன்னதாக நாளை பிற்பகல் திருச்சி வருகை தரும் எடப்பாடி பழனிசாமி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுக்கிறார்
மூன்று நாட்களும் அதே விடுதியில் தங்கி இருந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.