தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்- அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ். அறிவுரை
- அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றிபெறச் செய்ய முழுவீச்சில் களம் இறங்க வேண்டும்.
- பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் விழாக்கோலம் கொண்டுள்ளது.
திருச்சி:
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.
கடந்த மாதம் 7-ந் தேதி கோவை மேட்டுப் பாளையத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பின்னர் சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் 109 சட்ட மன்ற தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்த, எடப்பாடி பழனிசாமி நேற்று 3 நாள் சுற்றுப்பயணமாக திருச்சி வருகை தந்தார்.
விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த இந்த பிரசாரக் கூட்டங்களில் எழுச்சி உரை ஆற்றினார்.
பின்னர் இன்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தன்யார் ஓட்டலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதி நிலவரம் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகம் குறித்து அவர் ஆலோசனை வழங்கினார்.
மேலும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரசாரங்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும், பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி தேர்தல் பணி ஆற்ற வேண்டும்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றிபெறச் செய்ய முழுவீச்சில் களம் இறங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் 2-வது நாளாக இன்று மாலை 4 மணிக்கு மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணச்ச நல்லூர் கடை வீதியிலும், மாலை 5.30 மணிக்கு துறையூர் பஸ் நிலையம் அருகாமையிலும், இரவு 7 மணிக்கு முசிறி கைகாட்டி பகுதியிலும் எடப்பாடி பழனிசாமி திறந்தவேனில் பிரசாரம் செய்கிறார்.
இதற்கான முன்னேற்பாடுகளை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மூன்றாவது நாளாக நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மணப்பாறை பஸ் நிலையம் அரு காமையிலும், மாலை 5.30 மணிக்கு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி புத்தூர் நான்கு ரோடு, இரவு 7 மணிக்கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு உரையாற்றி தமது 3 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.
பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் விழாக்கோலம் கொண்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொடி, தோரணங்கள் பிளக்ஸ் பேனர்கள் வைத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் வருகை தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.