சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
- கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
- சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னையில் இன்று தொழில் அதிபர்கள் 5 பேருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சவுரி முடி மற்றும் விக் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோயம்பேட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் லோகநாதன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளர் 2-வது தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் வீடு, தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு ஆகியவற்றிலும் 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
இது தொடர்பாக தொழில் அதிபர்களின் வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து அதிகாரிகள் ஆவணங்களை திரட்டி உள்ளனர். இதன் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.