திடீரென பிரேக் போட்ட டிரைவர் - படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கண்டக்டர் உயிரிழப்பு
- மதுரையில் இருந்து புறப்பட்டதும் கண்டக்டர் கருப்பையா பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
- சாலையோரமாக பேருந்தை நிறுத்திய டிரைவர், கண்டக்டர் கருப்பையாவை சிகிச்சை அனுமதிப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்பு கொண்டார்.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த அந்த பேருந்தில் கண்டக்டராக புதுக்கோட்டை மாவட்டம் விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பணியில் இருந்தார். மதுரையில் இருந்து புறப்பட்டதும் கண்டக்டர் கருப்பையா பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
அந்த பேருந்து மதுரை நகரை கடந்து ஒத்தக்கடை பகுதியில் உள்ள திருச்சி நான்கு வழிச்சாலையில் ஏறி வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே இரும்பு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. அருகில் சென்றபோது திடீரென்று டிரைவர் பிரேக் பிடித்தார். அதே சமயம் பேருந்தின் கதவுகள் மூடப்படாமல் இருந்துள்ளது. இதில் டிக்கெட் வழங்கும் பணியில் இருந்த கண்டக்டர் கருப்பையா நிலை தடுமாறி பேருந்தின் படிக்கட்டு வழியாக கீழே விழுந்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனையடுத்து சாலையோரமாக பேருந்தை நிறுத்திய டிரைவர், கண்டக்டர் கருப்பையாவை சிகிச்சை அனுமதிப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்பு கொண்டார். இருந்தபோதிலும் வாகனம் வருவதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஆனது. இதற்கிடையே பலத்த காயம் அடைந்ததாலும், ரத்தப்போக்கு அதிகமானதாலும் கண்டக்டர் கருப்பையா மயங்கி சுயநினைவை இழந்தார். பின்னர் உடனடியாக அருகில் இருந்த ஆட்டோ மூலமாக கருப்பையாவை அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து உள்ளனர்.
அப்போது டாக்டர்கள் கருப்பையாவின் உடலை சோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு பேருந்தின் கதவுகள் முறையாக மூடப்படாத நிலையில் சாலை நடுவே இருந்த தடுப்பு காரணமாக பிரேக் பிடித்தபோது கீழே விழுந்து கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்ஸ் சேவை தாமதமானதாலும் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தமிழகத்தில் ஏற்கனவே அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளை தானியங்கி கதவு மூலமாக மூடுவதற்கு கோர்ட்டு உத்தரவிட்ட நிலையிலும் பெரும்பாலான அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாத சூழல் இருந்து வருகிறது. அத்துடன் முறையாக பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாத நிலையில் இது போன்ற விபத்துகளில் பயணிகளை தொடர்ந்து தற்போது போக்குவரத்து பணியாளர்களும் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருவது அரசின் அலட்சியத்தை காட்டுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலைகளில் வேகத்தடை மற்றும் போதிய மின்விளக்குகள் அமைக்கப்படாததால் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.