சென்னைவாசிகள் விரும்பி வளர்க்கும் நாய் இனம் எது தெரியுமா?
- வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் நாய்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
- சென்னையில் மொத்தம் 66 ஆயிரத்து 81 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
மக்கள் அதிகம் விரும்பி வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளில் நாய்களுக்கு எப்போதுமே முதல் இடம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமானதாகவும் இருப்பதால் உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு நாய் இனங்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வளர்த்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் நாய்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, சென்னையில் உள்ள மக்கள் அதிக விலை கொடுத்தும் இதுபோன்ற வெளிநாட்டு நாய் இனங்களை வாங்கி வளர்த்து வருகிறார்கள். இதற்கிடையே, பொதுமக்களை வளர்ப்பு நாய்கள் கடிப்பது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தது. இதனால், வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அந்த வகையில், சென்னையில் மொத்தம் 66 ஆயிரத்து 81 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உரிமம் பெறப்பட்டவைகளில் எந்த வகையான நாய் இனங்களை பொதுமக்கள் அதிகம் வாங்கி வளர்க்கிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லாப்ரடோர் ரெட்ரீவர்' என்ற வகையான நாய் இனம் முதல் இடத்தில் உள்ளது. இவை கனடாவை பூர்வீகமாக கொண்டது. அந்நாட்டு மீனவர்கள் இவ்வகை நாய்களை தங்களுக்கு உதவியாக வளர்த்து வந்தனர். இதனுடைய புத்திசாலி தனம், விசுவாசம், விளையாட்டுத் தன்மையால் பல்வேறு நாட்டவர்களும் விரும்பி வாங்கி வளர்த்து வருகிறார்கள்.
இதற்கு அடுத்தபடியாக, திபெத்தை பூர்வீகமாக கொண்ட 'ஷிஷ் சூ' என்ற வகை நாய் இனம் உள்ளது. இதனுடைய நீண்ட முடி பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும். அமைதியான குணம் என்பதால் இதை விரும்பி வாங்குகிறார்கள். அனைவராலும் அறியப்படும் 'பொமேரியன்' வகை நாய்கள் 3-வது இடத்திலும், ஸ்காட்லாந்தை பூர்வீகமாக கொண்ட 'கோல்டன் ரெட்ரீவர்' 4-வது இடத்திலும் உள்ளது.
'ஜெர்மன் ஷெப்பர்டு' 5-வது இடத்திலும், பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட 'பீகில்' வகை நாய் 6-வது இடத்திலும், சீனாவை பூர்வீகமாக கொண்ட 'பக்' வகை நாய் இனம் 7-வது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 'இந்தியன் ஸ்பிட்ஸ்' 8-வது இடத்திலும், சைபீரியாவை சேர்ந்ததாக கருதப்படும் 'ஸ்பிட்ஸ்' வகை நாய்கள் 9-வது இடத்திலும், திபெத்தை சேர்ந்த 'லாசா ஆப்சோ' 10-வது இடத்திலும் இருக்கிறது. இதேபோல, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 'சிப்பிப்பாறை' 11-வது இடத்தில் இருக்கிறது. தேனியின் 'கோம்பை' 15-வது இடத்திலும், ராஜபாளையம் நாய் 18-வது இடத்திலும் உள்ளது.