மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வி: மெண்டல்கள் போல் பேசுகின்றனர் ... தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் சர்ச்சை பேச்சு
- ஆர்.கே.நகர் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற உள்ளது.
- இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. அமைச்சர்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்கி பதவியும் இழந்துள்ளனர். அந்த வகையில் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசி பொன்முடி அமைச்சர் பதவி, கட்சி பதவிகளை இழந்துள்ளார்.
இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்.கே.நகர் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதி மக்களை அழைப்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர்.
அப்போது, அவர்களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதது குறித்து ஒரு பெண் கேள்வி எழுப்ப, அப்பெண்ணுக்கு ஆதரவாக மேலும் சில பெண்களும் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ. எபினேசர் விளக்கம் அளித்தார்.
இருப்பினும், அப்பகுதி மக்களுக்கும், எபினேசர் எம்.எல்.ஏ.வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ. எபினேசர், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மெண்டல்கள் போல் பேசுவதாக கூறினார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது:-
ஆர்.கே.நகர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கேள்வி எழுப்பிய மக்களை அடிக்க முற்படுகிறார்..
ஏழை வயிற்றில் அடித்தவர்கள் யாரும் நல்ல வாழ்வு கண்டதில்லை!
நன்றிகெட்ட இந்த எம்.எல்.ஏ எபினேசரும் இதனை உணரும் காலம் தூரத்தில் இல்லை! என்று பதிவிட்டுள்ளார்.