தொடர் விடுமுறை எதிரொலி: வெள்ளியங்கிரி மலையேற குவிந்த பக்தர்கள்
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்துள்ளனர்.
- வனத்துறையினர், மலையேற வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னரே மலையேற அனுமதித்து வருகிறார்கள்.
வடவள்ளி:
கோவை பூண்டியில் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுவாமி சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த சுயம்பு லிங்க சுவாமியை மலையேறி தரிசிக்க ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு, கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அன்று முதல் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்து வெள்ளியங்கிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்துள்ளனர். அவர்கள் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு, தங்கள் மலைப்பயணத்தை தொடங்குகின்றனர்.
கைகளில் குச்சிகளை வைத்து கொண்டு அதன் உதவியுடன் மலையேறி சென்று சுயம்பு வடிவிலான வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று அதிகளவிலான கூட்டம் இருந்தது. கிரிமலையில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சூரிய தரிசனம் முடிந்து பலகாரம் மேடையில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு அடிவாரத்தை நோக்கி கீழே இறங்கி வந்தனர்.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆர்வத்துடன் மலையேறுகின்றனர். இதய பலவீனமானவர்கள், நோயால் பாதிக்கப்பட்டோர் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலையேறும் பக்தர்களிடம் பிளாஸ்டிக் பைகள், மது, புகையிலை, பீடி, சிகரெட், தீப்பெட்டி, எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர், மலையேற வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னரே மலையேற அனுமதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மலையடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை கோவில் வளாகத்தில் நுழைந்தது. அங்கிருந்த பிரசாத கடையை அடித்து நொறுக்கி அங்கிருந்த அரிசியை ருசிபார்த்தது.
யானையை பார்த்த பக்தர்கள் சத்தம் போடவே, யானை வனத்திற்குள் சென்று விட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.