அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு டெபாசிட் தொகை - அரசு தரப்பில் பரிந்துரை
- 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கூடினால் வைப்புத்தொகை 3 லட்ச ரூபாய்.
- அனைவரும் அமைதியாக கலைந்து செல்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் பிரசாரங்களுள், ரோடு ஷோ நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தும்போது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க அனைவருக்கும் அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமர்ப்பிக்க வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு வழிகாட்டுதல்களை உருவாக்க ஆலோசனை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்த ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட் டது. இதில் அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், இன்பத்துரை எம்.பி. கலந்து கொண்டனர்.
அதுபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பவானி உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
பிரசார கூட்டங்களுக்கான விதிகள் அனைத்து கட்சிகளுக்கும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசு தரப்பில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள்:
* அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு டெபாசிட் தொகை நிர்ணயிக்க முடிவு
* 5000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.1 லட்சம் நிர்ணயம்
* 50,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட் தொகையாக நிர்ணயிக்க திட்டம்
* ரோடு ஷோ நடத்தும் அரசியல் கட்சிகளிடமிருந்து வைப்புத்தொகை வசூலிக்க அரசு தரப்பில் பரிந்துரை
* 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கூடினால் வைப்புத்தொகை 3 லட்ச ரூபாய்.
* 20 ஆயிரம் பேரில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை கூடினால் ரூ.8 லட்சம் வைப்புத்தொகை
* 50 ஆயிரத்துக்கு மேல் கூடினால் ரூ.20 லட்சம் மதிப்பு தொகையும் கட்ட பரிந்துரை
* 5000 முதல் 10 ஆயிரம் பேர் வரை கூடினார் ரூ.1 லட்சம் வைப்புத்தொகை
* நிகழ்ச்சிக்கு முன்னதாக 2 மணி நேரம் முன்னர் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரை
* ரோடு ஷோ பொதுக்கூட்டங்கள் 3 மணி நேரத்திற்கு உள்ளதாக முடிக்க வேண்டும்.
* அனைவரும் அமைதியாக கலைந்து செல்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* 3 மணி நேரத்திற்கு மேல் கால அவகாசம் தேவைப்பட்டால் காவல்துறை அதிகாரி முடிவெடுப்பார்.
* குறிப்பிட்டதை விட 50 சதவீதம் மேல் எண்ணிக்கை கூடினால் வைப்புத்தொகை திரும்பத் தர மாட்டாது.
இதைத் தொடர்ந்து அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் பிரசார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து ஐகோர்ட்டில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்.