காற்றழுத்த தாழ்வு பகுதி... மாத இறுதியில் வெளுத்து வாங்கப்போகும் மழை - டெல்டா வெதர்மேன்
- வளிமண்டல வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
- சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியிருப்பதாவது:-
மத்திய மேற்கு வங்கக்கடல் வடமேற்கு வங்கக்கடலில் வருகிற 25-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. ஆந்திரா, ஒடிசா வழியாக மகாராஷ்டிரா நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதற்கு வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை வருகிற 26-ந்தேதி முதல் மீண்டும் ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தீவிரமடையும். இந்த மழை வருகிற 29-ந் தேதி வரை நீடிக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த 2 நாட்களாக வடமாவட்டங்களில் மழை பெய்து கொண்டு உள்ளது. இன்று பரவலாக தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
வளிமண்டல வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.
சென்னை உள்பட வட மாவட்டங்களில் நாளை காலை வரையில் மழை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை காரைக்கால், நாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இன்று மாலை இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் பலத்த மழை பெய்வதற்கான சூழலும் உள்ளது. நேற்று இரவு முதல் பெய்த மழை இன்று பகலில் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
25-ந் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 26, 27, 28 29 ஆகிய நாட்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மாத இறுதியில் மீண்டும் மழைக்கான வாய்ப்பும் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது பலத்த மழையை கொடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.