தமிழ்நாடு செய்திகள்

கோவை மாவட்டத்தில் தொடரும் கனமழை: ஆழியார்- சிறுவாணி அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

Published On 2025-05-29 10:30 IST   |   Update On 2025-05-29 10:30:00 IST
  • சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
  • சுற்றுலா தலங்களாக விளங்கும் கோவை குற்றாலம், ஆனைமலை அருகே உள்ள கவியருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை:

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதிகனமழைக்காக சிவப்பு நிற எச்சரிக்கை இன்றும் நீடிக்கிறது.

நேற்றும், இன்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வால்பாறை தாலுகா சின்னக்கல்லார் பகுதியில் 11 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. பொள்ளாச்சி தாலுகா பகுதியில் 8 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. மாவட்டத்தில் முக்கிய அணைகளாக உள்ள சிறுவாணி, ஆழியார், பில்லூர், சோலையாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளன.

சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் நீர்த்தேக்க உயரம் 49.53 அடி என்றாலும், அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.

அணையில் இருந்து பெறப்படும் நீர் வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும், மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சிறுவாணி அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணையில் கடந்த 24-ந் தேதி 19.02 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. 25-ந் தேதி 21.55 அடி, 26-ந் தேதி 26.60 அடி, 27-ந் தேதி 30.24 அடி, நேற்று 32.73 அடியாக இருந்தது. இன்று காலை நீர்மட்டம் 34.80 அடியாக உயர்ந்தது.

கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 15.71 அடி உயர்ந்துள்ளது. மேலும் இன்று அணையில் 6 செ.மீ மற்றும் அடிவாரப்பகுதியில் 5 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. நீர் எடுப்பதற்காக உதவும் மூன்று வால்வுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

மற்றொரு குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 100 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை கடந்த 25-ந்தேதி நள்ளிரவு நிரம்பியது. அன்று முதல் அணையின் 4 மதகுகள் திறந்து உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று 5-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த 20-ந் தேதி 2 அடியாக இருந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3889.58 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 50 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலயில் 165 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 59.69 அடியாக உயர்ந்துள்ளது.

ஆழியாறு அணை நீர்மட்டம் கடந்த 24-ந் தேதி 75.30 கனஅடி நீர்மட்டம் இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்று காலை 80.20 அடியாக தண்ணீர் உயர்ந்துள்ளது.

இதேபோல சுற்றுலா தலங்களாக விளங்கும் கோவை குற்றாலம், ஆனைமலை அருகே உள்ள கவியருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பொது மக்கள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News