தமிழ்நாடு செய்திகள்

மோசடியில் இழந்த ரூ.37 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு- சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

Published On 2024-12-05 11:30 IST   |   Update On 2024-12-05 11:30:00 IST
  • வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பணம் இருப்பு விவரங்களை வீடியோ கால் மூலம் கேட்டறிந்துள்ளனர்.
  • சீனிவாசன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

ஈரோடு:

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று இணையதளம் மோசடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் கவர்ச்சிகர விளம்பரம் என விதவிதமாக ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதே போல் ஈரோட்டை சேர்ந்த இருவர் மோசடியில் இழந்த ரூ.37 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவர்களிடம் வழங்கி உள்ளனர்.

இதைப்பற்றிய சம்பவம் வருமாறு:-

ஈரோட்டை சேர்ந்தவர் செல்வன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது பேஸ்புக்கில் அறிமுகமான நபர் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பி செல்வன் ரூ.42 லட்சத்தை பல்வேறு தவணை முறைகளில் செல்வனுக்கு அனுப்பி உள்ளார்.

பின்னர் பேஸ்புக்கில் அறிமுகமான நபர் திடீரென தனது கணக்கை முடித்து விட்டார். இதனால் ஷேர் மார்க்கெட்டில் தன்னை முதலீடு செய்ய அறிவுறுத்திய நபர் குறித்த முழு விவரம் தெரியவில்லை. இதுகுறித்து செல்வன் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதைப்போல் ஈரோட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் சீனிவாசனிடம் வீடியோ காலில் பேசிய நபர், மும்பை அந்தேரி பகுதியிலிருந்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரி பேசுவதாகவும், உங்கள் ஆதார் கார்டு மற்றும் சிம் கார்டு எண்ணை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே உங்கள் ஆதார் கார்டு முடக்கப்படும்.

எனவே உங்கள் எப்.ஐ. ஆர் பதிவு செய்திருப்பதாகவும், விரைவில் உங்களை கைது செய்வோம் என்று கூறியுள்ளார். மேலும் வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பணம் இருப்பு விவரங்களை வீடியோ கால் மூலம் கேட்டறிந்துள்ளனர். இதை உண்மை என்று நம்பி சீனிவாசனும் அந்த நபரிடம் வங்கியின் பணம் இருப்பு விவரங்களை தெரிவித்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் சீனிவாசன் வங்கி சேமிப்பில் இருந்து ரூ.27 லட்சம் எடுக்கப்பட்டதாக அவருக்கு எஸ்.எம்.எஸ் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த இரு வழக்குகளையும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து பணத்தை எடுத்துக் கொண்ட வங்கியில் பேசி அந்த வங்கி கணக்கை உடனடியாக முடக்கினர். செல்வன் இழந்த தொகையில் ரூ.10 லட்சத்து 17 ஆயிரம், சீனிவாசன் இழந்த முழு தொகையான ரூ.27 லட்சத்தையும் மீட்டனர். இந்தத் தொகையை சைபர் கிரைம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி வேலுமணி ஈரோடு எஸ்.பி. ஜவகர் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

Tags:    

Similar News