தமிழ்நாடு செய்திகள்

வால்பாறையில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்- தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தம்

Published On 2025-03-29 13:47 IST   |   Update On 2025-03-29 13:47:00 IST
  • போராட்டம் காரணமாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.
  • கடையடைப்பு போராட்டம், தேயிலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும், வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கின.

வால்பாறை:

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளியான தினத்தில் இருந்து 60 நாட்களுக்குள் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக வால்பாறையில் வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் உணர்திறன் அறிவிப்பை ரத்து செய்ய கோரி வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள் தரப்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தங்கள் பணியை புறக்கணித்து, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், கார், ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் வால்பாறை நகரில் உள்ள ஜவுளிக்கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகள் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. நகராட்சி மார்க்கெட்டில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

இந்த கடையப்பு போராட்டம் காரணமாக வால்பாறையில் உள்ள நகராட்சி மார்க்கெட் மற்றும் கடைவீதி பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.

இதேபோல் வால்பாறை நகரை சுற்றியுள்ள முடீஸ், சோலையார் அணை உள்பட வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் எஸ்டேட்டுகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

கடையடைப்பு போராட்டம், தேயிலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும், வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கின.

Tags:    

Similar News