தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்கள்

Published On 2025-04-28 11:30 IST   |   Update On 2025-04-28 11:30:00 IST
  • கொடைக்கானலில் அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
  • பிரையண்ட் பூங்கா முழுவதும் பூக்களின் அணிவகுப்பு போல காட்சியளிக்கும்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து குடை பிடித்தபடியும், நனைந்தபடியும் அனைத்து இடங்களையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும் கொடைக்கானலை நோக்கி உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

கொடைக்கானலில் அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டன.

அந்த மலர் நாற்றுக்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டன. மேலும் மலர் செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு பராமரிப்பு பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலர் செடிகளில் தற்போது பல வண்ணப்பூக்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

குறிப்பாக சால்வியா, பேன்சி, கேலண்டுல்லா, பிங்க் ஆஸ்டர், லில்லியம் உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதன் அருகில் நின்று அவர்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். கோடை விழா தொடங்குவதற்கு முன்பாக மற்ற செடிகளில் உள்ள பூக்களும் பூக்கத் தொடங்கி விடும். அப்போது பிரையண்ட் பூங்கா முழுவதும் பூக்களின் அணிவகுப்பு போல காட்சியளிக்கும். மலர் கண்காட்சி நாட்களில் லட்சக்கணக்கான பூக்கள் இங்கு பூத்துக்குலுங்கும். இதனை ரசிப்பதற்காகவே அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நகராட்சி மற்றும் காவல் துறை, சுற்றுலா அதிகாரிகள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும் கோடை சீசன் காலங்களில் கூடுதல் வாகனங்கள் வந்து செல்ல கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் வந்து செல்வதற்கும் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏரிச்சாலை உள்ளிட்ட அ னைத்து சுற்றுலா இடங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News