தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-05-14 08:10 IST   |   Update On 2025-05-14 08:10:00 IST
  • ஊட்டி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
  • வளர்ப்பு யானைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரும்புகள் கொடுத்து மகிழ்ந்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடைபெற்றது. வருகிற 15-ந்தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது.

இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர், 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கோவையில் இருந்து காரில் ஊட்டிக்கு வந்தார்.

நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்தார்.

அதைத்தொடர்ந்து ஆதிவாசி மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்தபடி நடனமாடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அவர், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வளாகத்தில் பாகன்கள் குடும்பத்தினருக்கு ரூ.5.06 கோடி செலவில் கட்டப்பட்ட 44 வீடுகள் மற்றும் விளையாட்டு மைதானம் திறந்து வைத்தார்.

பின்னர் அவர், பாகன் மாறன், கமலா தம்பதியிடம் வீட்டுக்கான சாவியை வழங்கினார். மேலும் அவர், அதே பகுதியில் மரக்கன்றுகள் நட்டார்.

அதன்பிறகு அவர், லண்டானா, உன்னி செடிகளின் குச்சிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட யானைகளின் உருவங்களை பார்வையிட்டார். மேலும் தமிழக வனத்துறை சார்பில் வனச்சரகர்களின் பயன்பாட்டுக்காக ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான 32 புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதேபோல் வனவிலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 15 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.5 கோடியில் முதுமலை வனப்பகுதி வழியாக (வான்வெளி தொகுப்பு கம்பிகள்) உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து வளர்ப்பு யானைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரும்புகள் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் எலிபன்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆஸ்கார் விருது பெற்ற குறும்படத்தில் நடித்த பொம்பன், பெள்ளியை சந்தித்து பேசினார். மேலும் அவர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர், வனத்துறை அதிகாரிகளிடம் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார்.

இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உதகையில் நடைபயிற்சி மேற்கொண்டார். மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பெரும்பகுதி அரங்கில் மனைவி துர்காவுடன் முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்டார்.

நீலகிரி எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவும் உடன் இருந்தார்.

Tags:    

Similar News