தமிழ்நாடு செய்திகள்

ஜெர்மனி பயண அனுபவங்களை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-09-03 14:01 IST   |   Update On 2025-09-03 14:01:00 IST
  • தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று வரவேற்பளித்தனர்.
  • குழந்தைகள் பதாகை ஏந்தி அன்பைப் பொழிந்தனர்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்!

தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் - ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன்.

இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்…



ஆகஸ்ட் 30-ந்தேதி இரவு ஜெர்மனியின் டசெல்டோர்ஃப் விமான நிலையத்தில் தரையிறங்கினோம். தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று வரவேற்பளித்தனர். குழந்தைகள் பதாகை ஏந்தி அன்பைப் பொழிந்தனர்.

ஆகஸ்ட் 31 மாலை நம் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு நேரம்.

பின்னர், அறிவாலயமாகத் திகழும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்திற்குச் சென்றேன். நாம் இரண்டு முறை அளித்த நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, ஜெர்மனியில் தமிழ்ப் பணி தொடர்கிறது.

செப்டம்பர் 1-ந்தேதி டசல்டோர்ஃப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனி சந்திப்புகள்.

ரூ.3201 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான MoU-க்கள் போடப்பட்டன. அருகிலோர் கார் மியூசியம்! அங்கு உலகின் முதல் கார் உள்ளிட்ட பலவகை கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பின்னர், முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான MoU-க்கள் கையெழுத்தாகின.

செப்டம்பர் 2-ந்தேதி NRW-வின் மினிஸ்டர் பிரசிடென்ட் ஹென்ரிக் வுஸ்ட் என் மீது அன்புகொண்டு, நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு தனது அரசின் உயரதிகாரிகளுடன் தனது கான்வாயையும் அனுப்பியிருந்தார்.

வாசலிலேயே காத்திருந்து வரவேற்றார் அவர். அங்கிருந்த விசிட்டர் புத்தகத்தில், NRW - தமிழ்நாடு இணைந்து வெற்றிபெறுவோம் என எழுதிக் கையெழுத்திட்டேன்.

திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்வுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினேன் என்று புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 



Tags:    

Similar News