தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- முரசொலி அலுவலகம் சென்று கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
- செம்மொழி நாள் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டது.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வீட்டில் உள்ள கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு நேராக கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார்.
அங்குள்ள கருணாநிதி யின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். வீட்டில் இருந்த தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.
அதன்பிறகு அண்ணா அறிவாலயம் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து அதன் அருகில் வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முரசொலி அலுவலகம் சென்று கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து உருவப்படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்று வணங்கினார்.
அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டம் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து படத்துக்கு மலர்தூவி வணங்கினார்.
அவருடன் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் வந்திருந்தனர். இதன்பிறகு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த கருணாநிதியின் பெருமையை போற்றிடும் வகையில் அவர் பிறந்தநாளான ஜூன் 3-ம் நாள் (இன்று) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க கலைவாணர் அரங்கில் நடைபெற்ற செம்மொழி நாள் விழாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அனைவரையும் தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ் செம்மொழி குறித்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதன் பிறகு நிகழ்ச்சி தொடங்கியதும் முத்தமிழறிஞரின் முத்தமிழ் கலை பண்பாட்டுத் துறை வழங்கும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லோருக்கும் எல்லாமுமாய் என்ற முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த ஆவணப்படம் செய்தித் துறை சார்பில் செம்மொழி நாள் குறும்படம் வெளியிடப்பட்டது.
இவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முனைவர் தாயம்மாள் அறவாணன் என்பவருக்கு 2025-ம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கி விருதுத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கலைஞர் மு.கருணாநிதியின் திருஉருவச் சிலையும் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் செம்மொழி நாள் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்.
விழாவில் தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரையும் வெளியிட்டார்.
அதன் பிறகு சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. செம்மொ ழியின் தனிச்சிறப்பு அதன் தென்மையே-அதன் இள மையே என்று பட்டிமன்ற பேச்சாளர்கள் பேசி னார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.