தமிழ்நாடு செய்திகள்

ரூ.100 கோடி செலவில் 63 கோவில்களுக்கு திருப்பணி - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2025-07-11 14:12 IST   |   Update On 2025-07-11 14:12:00 IST
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 198 வாகனங்களின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • பள்ளிக்கல்வித் துறை சார்பில் “உலகப் பொதுமறை திருக்குறள்” என்னும் நூலினை வெளியிட்டார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 கோவில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 17 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், பள்ளிக்கல்வித் துறை சார்பில் "உலகப் பொதுமறை திருக்குறள்" என்னும் நூலினை வெளியிட்டார். இந்நூலினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் சேர்ந்து கூட்டு வெளியீடாக வெளியிடுகிறது.

தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற 2 கோடியே 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் முனைவர் ம. இராசேந்திரனிடம் வழங்கினார்.

Tags:    

Similar News