தமிழ்நாடு செய்திகள்

கோவையில் செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2025-11-25 14:06 IST   |   Update On 2025-11-25 14:06:00 IST

    கோவை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கள ஆய்வு மேற்கொள்கிறார்.

    இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர்கள் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

    அதனை தொடர்ந்து அவர் கார் மூலமாக காந்திபுரத்திற்கு வந்தார். காந்திபுரம் மத்திய ஜெயில் வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அங்கு உள்ள மலைக்குன்றின் அருகே வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டினையும் திறந்து வைத்தார். பூங்காவில் வைக்கப்பட்டுள்ள கடையெழு வள்ளல்களின் சிலைகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மொழி பூங்காவில் உள்ள செம்மொழி வனம், ரோஜா வனம், மூலிகை வனம், புதிர் வனம், நீர்வனம் செயற்கை நீருற்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் பார்வையிட்டார்.

    தொடர்ந்து நீர்வீழ்ச்சி அரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் முதலமைச்சர் கண்டு ரசித்தார்.

    பின்னர் அங்குள்ள ஆடிட்டோரியத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 150 பேருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி பூங்காவானது 45 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்திலேயே மிகப்பெரிய பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ள கோவை செம்மொழி பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்தோட்டம், மணம் கமழ் தோட்டம், பாலைவன தோட்டம், மலர் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் என 23 வகை தோட்டங்கள் உள்ளது. மேலும் 2 ஆயிரம் வகையான 5 லட்சம் தாவரங்களும் இடம் பெற்றுள்ளது.

    இதுதவிர திறந்தவெளி அரங்கம், தோட்டக்காரர்கள் அறை, செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், கடையெழு வள்ளல்களின் கற்சிலைகள், நடைபயிற்சி செய்ய வசதியாக நடைபாதை சாலை வசதி, உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் மாற்றுத்திறனாளிகள் வசதிக்கு ஏற்ப பிரத்யேக விளையாட்டு திடலும் உருவாக்கப்பட்டு உள்ளது.

    செம்மொழி பூங்கா திறப்பு நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கோவை-அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலுக்கு சென்றார்.

    அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு அங்கு தமிழ்நாடு தொழில்துறை சார்பில் நடந்த டி.என்.ரைசிங்(தமிழ்நாடு வளர்கிறது) முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

    கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை கோவையில் இருந்து கார் மூலமாக ஈரோடு மாவட்டத்திற்கு செல்கிறார்.

    முன்னதாக கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ் செல்வன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் மாநகரில் போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமையிலும், புறநகரில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Tags:    

    Similar News