சுதந்திர தின விழாவில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்த முதலமைச்சர்
- தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு வழங்கினார்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.
நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.
இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றிய அவர் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையடுத்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு வழங்கினார். தகைசால் தமிழர் விருது பெற்ற காதர் மொகிதீனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருதை முதலமைச்சர் வழங்கினார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் இறகுப் பந்தாட்ட வீராங்கனையான துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
டி.எஸ்.பி. பிரசன்னகுமார், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.
காகர்லா உஷா, கணேசன், லட்சுமி பிரியா, ஆனந்த், அண்ணாதுரைக்கு நல்லாளுமை விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.