தமிழ்நாடு செய்திகள்

சென்னை குடிநீர் ஏரிகளில் 56 சதவீதம் நீர் இருப்பு

Published On 2025-07-07 10:13 IST   |   Update On 2025-07-07 10:13:00 IST
  • ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
  • 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,594 மில்லியன் கன அடியாக உள்ளது.

சென்னை:

சென்னையில் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.

இந்த நிலையில், தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய பின்னர், ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால், நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி இந்த 5 ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 6,682 மில்லியன் கன அடி. அதாவது 56.83 சதவீதமாகக் குறைந்துள்ளது.

3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நேற்று நிலவரப்படி 2,456 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

அதேபோல், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,251 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,594 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

மேலும், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 274 மில்லியன் கன அடியும்,சோழவரம் ஏரியில் 157 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

சென்னை மாநகருக்கு ஒரு மாதத்துக்கு சராசரியாக ஒரு டி.எம்.சி. (ஆயிரம் மில்லியன் கன அடி) குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில், தற்போது 6 டி.எம்.சி. குடிநீர் இருப்பு உள்ளது.

மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம், தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால், நிகழாண்டில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News