மகளிர் நல வாரியத்தில் 12-ந்தேதி உறுப்பினர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
- மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும்.
- சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர்களுக்கான நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 8-வது தளத்தில் வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இம்முகாமில் கலந்து கொள்ள பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அலைபேசி ஆகியவற்றை எடுத்து வந்து www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும். இத்திறன் பயிற்சி மேற்கொள்ளுதல் வாயிலாக சுய தொழில் புரிய மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TADHCO)ன் கீழ் செயல்படுத்தப்படும் சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.