தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
- வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் வழுவிழந்தது. இருப்பினும், அதே மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.