தமிழ்நாடு செய்திகள்

சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

Published On 2025-10-19 07:32 IST   |   Update On 2025-10-19 07:32:00 IST
  • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது.
  • வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து பருவமழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்கிறது. அதிலும் நேற்று பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், சில இடங்களில் கனமழையும் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News