தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் உருவானது. இது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.
மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரைகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அமைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கொங்கன் - வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு -தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 22-ந்தேதி மற்றும் 23-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 24-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.