தமிழ்நாடு செய்திகள்

போலீஸ்காரர்கள் குடும்பத்தில் பரபரப்பு- கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் அடித்து சித்ரவதை: 4 பேர் மீது வழக்கு

Published On 2025-07-18 13:04 IST   |   Update On 2025-07-18 13:04:00 IST
  • கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொன்றுவிட்டு வேறு திருமணம் செய்து கொள்வேன் என்று கணவர் பூபாலன் மிரட்டி உள்ளார்.
  • பலத்த காயமடைந்த தங்கபிரியா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை:

மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்தவர் தங்கபிரியா, தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும், மதுரையை அடுத்த அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் பூபாலன் என்பவருக்கும் கடந்த 3.7.2017 அன்று திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பூபாலனின் தந்தை செந்தில்குமரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

தங்கபிரியா திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 60 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு மாமனார் செந்தில் குமரன், கணவர் பூபாலன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் சேர்ந்து தங்கபிரியாவை பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் புதிதாக வீடு வாங்குவதற்காக உன் தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி தங்கபிரியாவை அடித்து உதைத்துள்ளனர். மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வராவிட்டால், உன்னை கொன்றுவிட்டு வேறு திருமணம் செய்து கொள்வேன் என்று கணவர் பூபாலன் மிரட்டி உள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தங்கபிரியா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தங்கபிரியா தனது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரின்பேரில் தங்கபிரியாவின் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது அப்பன் திருப்பதி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் திருப்பூர் ரிதன்யா, குமரி மாவட்டம் ஜெபிலா போன்ற பல பெண்கள் வரதட்சணை கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் உலுக்கிய நிலையில், காவல்துறை குடும்பத்தில் இருந்து இவ்வாறான செயல் வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News