காட்டாற்றின் நடுவே சிக்கிய கார்- நூலிழையில் உயிர் தப்பிய 3 பேர்
- நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- ஆற்றை கடக்க முயன்றபோது கார் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 8 நாட்கள் முன்னதாகவே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை இடையே, நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆற்றை கடக்க முயன்றபோது கார் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓவேலி பகுதிக்கு சென்றவர்கள் தர்மகிரி பாலத்தை கடந்தபோது வெள்ளத்தில் சிக்கினர்.
இந்த காரில் இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் ஆற்றின் நடுவே சிக்கியதும் அதில் இருந்தவர்கள் உடனடியாக கீழே குதித்து தப்பியதால் உயிர் பிழைத்துள்ளனர்.