டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்க- மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்திய திருமாவளவன்
- மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
- இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே தமிழக சட்டசபையில் மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடக் கோரி மத்திய அரசின் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், "இந்திய ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களைச் சந்தித்து, மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் "டங்க்ஸ்டன் சுரங்கம்" அமைப்பதைக் கைவிடக் கோரி வலியுறுத்தினேன்.
அதனைப் பெற்றுக்கொண்ட அவர், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய ஒன்றிய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என உறுதியளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தனது பார்வைக்கு வந்ததாகவும் கூறினார். அத்துடன், தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருப்போம்; கவலை வேண்டாமென்றும் கூறினார்" என்று பதிவிட்டுள்ளார்.