காதலன் தினேசுடன் கொலையுண்ட சவுந்தர்யா
வேறு ஒரு வாலிபருடன் பழகியதால் ஆத்திரம்- காதலியை கத்தியால் குத்தி கொன்ற காதலன்
- சவுந்தர்யா, தினேஷின் போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு, நெருக்கமாக ஆண் நண்பருடன் பழகி வந்ததாக தெரிகிறது.
- இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் சவுந்தர்யாவை சந்திக்க தினேஷ் வந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் அருகே உள்ள கிறிஸ்துவகண்டிகை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் சவுந்தர்யா (வயது23). இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் ஆகும். சவுந்தர்யா தோழிகளுடன் அதே பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இவருக்கும் அதே பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரின் காதலுக்கும் பெற்றோர் சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சவுந்தர்யா- தினேஷ் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களது திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சவுந்தர்யாவுக்கு வேறொரு ஆண் நண்பருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தினேசுடன் பேசுவதை குறைத்தார். இதனால் சந்தேகம் அடைந்த தினேஷ் விசாரித்த போது சவுந்தர்யா தன்னை விட்டு வேறு ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இதனை தினேஷ் கண்டித்து பலமுறை சவுந்தர்யாவை எச்சரித்தார். இருப்பினும் சவுந்தர்யா, தினேஷின் போன் நம்பரை பிளாக் செய்துவிட்டு, நெருக்கமாக ஆண் நண்பருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் தினேஷ் கடும் ஆத்திரம் அடைந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு சவுந்தர்யாவை சந்திக்க அவர் தங்கி இருந்த அறைக்கு தினேஷ் வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து தினேஷ் சென்று விட்டார்.
இதற்கிடையே இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் சவுந்தர்யாவை சந்திக்க தினேஷ் வந்தார். அப்போது அறையில் சவுந்தர்யா மட்டும் தனியாக இருந்தார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சவுந்தர்யாவை சரமாரியாக குத்தினார். இதில் வயிறு, முகம், கை, காலில் சரமாரியாக காயம் அடைந்த சவுந்தர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடனே தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது சவுந்தர்யா கொலைசெய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சவுந்தர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய காதலன் தினேஷ் அவரது சொந்த ஊருக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.
சவுந்தர்யா கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து அவரிடம் நெருங்கி பழகிய ஆண் நண்பரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.