தமிழ்நாடு செய்திகள்

வெடிகுண்டு சோதனையால் மதுரை ஐகோர்ட் கிளை பூட்டப்பட்டு வெளியே காத்திருந்த வக்கீல்கள்.

ஐகோர்ட் மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்: வக்கீல்கள், பொதுமக்களை வெளியேற்றி தீவிர சோதனை

Published On 2025-09-26 11:25 IST   |   Update On 2025-09-26 12:30:00 IST
  • சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் புரளி என தெரியவந்தது.
  • வெடிகுண்டு புரளியால் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணை சற்று தாமதமாக தொடங்கியது.

மதுரை:

மதுரை ஐகோர்ட்டில் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள 14 மாவட்டகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்கள், பல்வேறு மாவட்ட வழக்கறிஞர்கள் மதுரை ஐகோர்ட்டிற்கு வந்து செல்வதுண்டு. இதனால் ஐகோர்ட்டு வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில் இன்று காலை ஐகோர்ட்டு பணிகள் வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது ஐகோர்ட்டு மின்னஞ்சலில் ஒரு மெயில் வந்திருந்தது. அதில் ஐகோர்ட்டு வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஐகோர்ட்டு அலுவலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஐகோர்ட்டில் வந்திருந்த நீதிபதிகள், பொதுமக்கள், வக்கீல்கள், ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வளாகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு வளாகத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ஐகோர்ட்டு வளாகம், நீதிபதி குடியிருப்பு, நீதிமன்ற அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் புரளி என தெரியவந்தது. இதனால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வெடிகுண்டு புரளியால் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணை சற்று தாமதமாக தொடங்கியது.

இதற்கிடையில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News