பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனை- சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள புதுவியூகம்
- தமிழக பா.ஜ.க. கட்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
- தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் தமிழக பா.ஜ.க. கட்சியும் அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி உள்ளது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே தமிழகம் வந்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.
மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக பா.ஜ.க. கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வந்துள்ளார். கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மகளிர் தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக பா.ஜ.க. கட்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமிழகம் முழுவதும் 66 மாவட்ட தலைவர்களும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். மொத்தம் 175 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் பேசும்போது, நிர்வாகிகள் அனைவரும் எப்படி பணியாற்ற வேண்டும், தேர்தலை சந்திப்பதற்கு என்னென்ன விஷயங்களை கையில் எடுக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். காலை 10 மணி அளவில் தொடங்கிய பயிற்சி முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் பா.ஜ.க. தலைவர்கள், கட்சியின் வளர்ச்சி பணிகள் பற்றியும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் முக்கிய தகவல்களை வெளியிடுகிறார்கள்.
தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்வது பற்றியும், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக பா.ஜ.க. கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, "தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வலிமை பெறுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகனுடன் அவரது காரில் ஒன்றாக வந்து இறங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவருக்கும் பெண்கள் ராக்கி கயிறு கட்டி அட்சதை தூவி வரவேற்றனர். இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை வழக்கத்துக்கு மாறாக கலர் சட்டை அணிந்து வந்திருந்தார்.
இன்றைய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அடையாள அட்டையை பார்த்த பிறகே அனைத்து நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலையை நடிகை நமீதா சால்வை அணிவித்து வரவேற்றார்.
பா.ஜ.க. அலுவலகம் முன்பு கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வாழை மரங்களும் கட்டப்பட்டு பா.ஜ.க. அலுவலக சாலை விழாக்கோலம் பூண்டிருந்தது.