திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடக்கம்
- அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று காலை 5 மணிக்கு உகப்படிப்பு, 6 மணிக்கு கொடி பட்டம் பதியை சுற்றி வந்து கொடியேற்றம் நடக்கிறது. அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.
தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது. காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பணிவிடை, தொடர்ந்து அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப் படிப்பு,பணிவிடை 5மணிக்கு புஷ்ப வாகன பவனி, தொடர்ந்து அன்ன தர்மம் நடக்கிறது.
11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை பால் அன்ன தர்மம், உச்சிப் படிப்பு, பணிவிடை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகன பவனி நடக்கிறது
விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 6மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை, பால் அன்ன தர்மம், 9மணிக்கு அன்ன தர்மம், நடக்கிறது. அன்று இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் கோபால் நாடார், துணை தலைவர் அய்யா பழம், இணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை செயலாளர்கள், ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜ பெருமாள், சுதேசன், இணைத்தலைவர்கள் விஜயகுமார், செல்வின், பால்சாமி, ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.