தமிழ்நாடு செய்திகள்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2025-11-26 10:48 IST   |   Update On 2025-11-26 10:48:00 IST
  • ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது.
  • சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர்.

சென்னை:

சென்னை அமைந்தகரையில் 'ஆருத்ரா கோல்டு' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைந்தகரை, வில்லிவாக்கம், அண்ணாநகர், வேலூர், திருவண்ணாமலை உள்பட 26 இடங்களில் கடந்த 2022-ம் ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஆவணங்கள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.1 லட்சம் பணம் செலுத்தினால் வட்டியாக ரூ.36 ஆயிரம் தருவோம் என ஆசை காட்டப்பட்டது தெரிய வந்தது. இப்படி ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து ஆருத்ரா நிறுவனம் சட்ட விரோத பணபரிமாற்ற விவகாரத்தில் சிக்கியுள்ளது. இது தொடர்பாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 15 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, வேலூர், காஞ்சிபுரம் உள்பட 15 இடங்களில் நடைபெறும் இந்த சோதனையின் போது சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் முடிவிலேயே முழுமையான தகவல்கள் தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News