தமிழ்நாடு செய்திகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி அறுபடை வீடுகள் கண்காட்சி இன்று தொடங்கியது

Published On 2025-06-16 11:42 IST   |   Update On 2025-06-16 11:42:00 IST
  • வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
  • பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை:

மதுரையில் வருகிற 22-ந்தேதி பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு பாண்டி கோவில் வண்டியூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டையொட்டி அங்குள்ள திடலில் அறுபடை முருகனின் மாதிரி கண்காட்சி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோவில்களின் கோபுரங்களுடன் முகப்பு தோற்றமும், உள்ளே சென்றால் பிரகாரமும், தனி அறை மூலவர் சன்னதியாகவும் தத்ரூபமாக வடிவமைத்து அங்கு வழிபாடு செய்யப்பட்ட வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் பொதுமக்கள் வந்து பார்வையிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்த கண்காட்சியை புதுக்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து அறுபடை வீடுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த முருகன் சிலைகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்து வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது கண்காட்சியை காண திரண்டு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியானது மாநாடு நடைபெறும் 22-ந்தேதி வரை இருக்கும் என்றும், இதனை காண வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளதாகவும் முருக பக்தர்கள் மாநாட்டு குழுவினர் தெரிவித்தனர். 

Tags:    

Similar News