தமிழகத்தில் நடக்கும் ஆட்சி ஊறுகாய் அளவிற்கு கூட ராமராஜ்ஜியமாக இல்லை - அண்ணாமலை
- ராமரின் வாழ்க்கை குணாதிசயங்களை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- நீங்கள் போடும் ஓட்டு நமக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வைகுண்டபுரத்தில் பழமையான ஸ்ரீராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சமய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:
உலகத்தில் கடவுள் வந்து ராஜாவாக இருந்து ஆட்சி செய்து ஆட்சி இருக்க வேண்டும் எனக் காட்டியவர் கடவுள் ராமர். இதனால் ராமராஜ்ஜியம் என சொல்கிறோம். ராமர் மனிதனாக இருந்து ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுள்ளார்.
மக்களாட்சியில் இருக்கும்போது மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமர் ஒரு இலக்கணம். அநியாயம் நடந்தபோது எப்படி நடந்து கொண்டார். சட்ட திட்டத்தை எப்படி காப்பாற்றினார். அவருடைய தந்தை கொடுக்கிறேன் என சொன்ன பதவியை கொடுக்காதபோது எப்படி நடந்து கொண்டார்? என்பதை பார்க்க வேண்டும்.
பகலில் போனால் மக்கள் தடுப்பார்கள் என்பதற்காக இரவில் காட்டுக்கு சென்றார். ராமர் வாழ்க்கையில் ஒரு ஒரு விஷயமும் ஒரு குணத்தை சொல்லி கொடுக்கிறது. தம்பியிடம், பெற்றோரிடம், மன்னராக எப்படி நடந்து கொண்டார். எதிரியாக இருந்தாலும் எப்படி சண்டை போட்டார்? யுத்தத்தை எப்படி நடத்தினார்? என்பதையும் பார்க்க வேண்டும்.
ராமரின் வாழ்க்கை குணாதிசயங்களை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஸ்ரீராமரை போல் இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு அவரது பெயரை வைக்கிறோம். கடவுளின் குணாதிசயங்கள் வர வேண்டும் என்பதற்காக.. இதனை செய்கிறோம்.
தமிழகத்தில் இருக்கும் ஆட்சி ஊறுகாய் அளவுக்கு கூட ராமராஜ்ஜியமாக இல்லை. குடும்பத்தில் எப்படி ராமர் இருந்தார் என்பதற்கும், இன்று ஆட்சியாளர்கள் குடும்பம் இன்று அவர்களே ஆட்சியாக இருக்கிறார்கள் என்பதற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எங்கேயோ ஒரு இடத்தில் யாருக்கோ ஒரு பிரச்சனை வந்தால் மன்னர் துடிப்பார்.
ஆனால், தற்போது மக்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்களா? என்றால் கிடையாது. ஆட்சியாளர்கள், மக்களிடம் எப்படி பேச வேண்டும். என்ன பேசினால் கேட்பார்கள் என்பதில் 100 மார்க் வாங்கிவிட்டார்கள்.தேர்தலின் போதும், ஓட்டு வாங்கும்போது, தேர்தல் முடிந்து ஓராண்டுக்கு பிறகும் எப்படி பேச வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு தெரியும்.
அரசியல்வாதி 5 ஆண்டுகளில் பேசுவதை பார்க்க வேண்டும். ஓட்டு வாங்கிய பிறகு ஏளனமாக இருப்பார்கள். 3-வது வருடத்தில் இருந்து பக்கத்தில் வந்து விடுவார்கள். 5-வது ஆண்டில் ஊர்விழா, தெரு விழாவுக்கு வந்து விடுவார்கள். எப்படி நயமாக பேசி ஓட்டை வாங்க வேண்டும் என்பதில் தமிழகத்தில் சில அரசியல்வாதிகள் பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு தெளிவாகி விட்டார்கள்.
அவர்களால், அவர்களுக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும் ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது. அனைவரும் சிந்தித்து ஓட்டு போட வேண்டும். எந்த கட்சி எப்படிப்பட்ட தலைவன் என்ன மாற்றத்தை கொடுக்க போகிறார் என சிந்திக்க வேண்டும்.
நீங்கள் போடும் ஓட்டு நமக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது. உங்களுக்கான ஓட்டை உங்கள் பெற்றோர்கள் ஓட்டு போட்டு விட்டனர். நீங்கள் எப்படி, ஒரு மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதை உங்களின் தந்தையும், தாயும் ஓட்டுப்போட்டு விட்டனர். இன்றைக்கு நீங்கள் ஓட்டுப்போடுவது உங்கள் குழந்தைகளுக்கானது. எப்படிப்பட்ட மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக ஓட்டுப்போட உள்ளீர்கள்.
எந்த மாற்றமும் 5 ஆண்டுகளில் நடக்காது. சனாதன தர்மத்தை பேணி காக்க வேண்டும் என நினைத்தால், ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
சனாதன தர்மத்தை பேணிக்காக்க வேண்டும் என்று நினைத்தால், வாக்களிக்கக்கூடியவர்களாகிய சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் நீங்கள், யார் சனாதன தர்மத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்று வாக்களிக்கும் முன் ஒரு முறை நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் சமீபத்தில் பேசும்போது, கடவுளின் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு அரசியல் கட்சி அரசியல் செய்கிறது என்று கூறினார். விநாயகர் சிலையை உடைத்தது யார்? ராமர்பாலத்துக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்று கூறியபோது ராமர் என்ன என்ஜினீயரா என்று கேட்டது யார்?
கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசியபோது கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது யார்? சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட மாநாட்டு மேடையில் நம்முடைய கட்சியை சேர்ந்தவர்கள் ஏறினார்களா?
முதலமைச்சரின் மகன் ஏறினாரா? டெங்கு கொசுவை ஒழிப்பது போன்று சனாதன தர்த்தை ஒழிப்போம் என்று கூறியது நாமா அல்லது முதலமைச்சரும் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த அவரது மகனா?
குழந்தைகளுக்கு சனாதன தர்மத்தை முழுமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும். கம்பராமாயணத்தை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சஷ்டி தினத்தில் கந்த சஷ்டி கவசத்தை பாட வைக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு மகா பாரதத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நமது குழந்தைகளுக்கு இன்று 8-ம் வகுப்பில் நீட் பயிற்சி, 6-ம் வகுப்பில் சிவில் சர்வீஸ் பயிற்சி கொடுக்கிறோம். இந்த வயதில் அந்த குழந்தைகளுக்கு அவற்றை பற்றியெல்லாம் தெரியுமா? இவற்றையெல்லாம் சொல்லிக்கொடுத்தபிறகு அந்த குழந்தை, எவ்வளவு படித்தாலும் தந்தை, தாயை சரியாக பராமரிப்பது கிடையாது.
வியர்வை, ரத்தத்தை கொடுத்து சனாதனத்தை காப்பாற்றியவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ளனர். மதமாற்றத்தை பற்றிய விவரத்தை முழுமையாக அறிந்தவர்கள் இங்கு உள்ளனர். எந்த மதமும் நமக்கு போட்டி கிடையாது. அவரவர் மதம் அவரவர்களுக்கு பெரியது.
இவ்வாறு அவர் பேசினார்.