தமிழ்நாடு செய்திகள்

உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் அறிக்கை

Published On 2025-05-19 12:19 IST   |   Update On 2025-05-19 12:19:00 IST
  • தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் வேளாண்மையைத் தான் வாழ்வாதாரமாகக் கொண்டு உள்ளனர்.
  • வேளாண் தொழில் வளர்ந்தால் தான் அந்த 60 சதவீதம் மக்களும் முன்னேறுவார்கள்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500ஆக உயர்த்த வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதில் 60 சதவீதம் மட்டும் தான் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினால், 2021-ம் ஆண்டில் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை 2026-ம் ஆண்டில் நிறைவேற்றி விடுவோம் என்று திமுக அமைச்சர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை கிண்டல் செய்கின்றனர். வேளாண் வளர்ச்சிக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

2024-25-ம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரம் 9.69 சதவீதம் வளர்ச்சி அடைந்து விட்டதை கோடிக்கணக்கில் செலவழித்துக் கொண்டாடிய திமுக அரசு, வேளாண்துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஒப்புக் கொண்டு, நடப்பாண்டிலாவது வேளாண்துறையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த நேர்மை திமுக அரசுக்கு சிறிதளவு கூட இல்லை. மாறாக, இந்த உண்மையை மறைக்கும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் வேளாண்துறை சராசரியாக 5.66 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாகக் கூறி பொய்யாக பெருமை தேடத் துடிக்கிறது.

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் வேளாண்மையைத் தான் வாழ்வாதாரமாகக் கொண்டு உள்ளனர். வேளாண் தொழில் வளர்ந்தால் தான் அந்த 60 சதவீதம் மக்களும் முன்னேறுவார்கள். அவர்கள் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது. எனவே, வேளாண்துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

அதற்காக அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தல், குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்காக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். அதன் மூலம் வேளாண் வளர்ச்சியையும், உழவர்களின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News